சென்னை:சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கலைவாணர் அரங்கத்தின் அருகே ஒருவர் தீக்குளிக்க முயன்றார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவரைத் தடுத்து காப்பாற்றினர்.
இதையடுத்து அந்த நபரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பதும், தஞ்சாவூர் அம்மாபேட்டையில் டி.சி.சி.எல். (TCCL) அரசு கேபிள் டிவி நடத்திவருவது தெரியவந்தது.
மேலும், அதே பகுதியில் உள்ள திமுக நகரச் செயலாளர் ரமேஷ், தஞ்சாவூர் கேபிள் செந்தில் (AMN Signal, VGK Digital) ஆறுமுகத்தின் கேபிளை அபகரித்துக்கொண்டதாகவும், தஞ்சாவூரில் காவல் துறையினரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால் முதலமைச்சரைப் பார்த்து மனு கொடுப்பதற்காக வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.