தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மின்சார ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்.. விசாரணையில் தகவல் - சென்னை ரயில் விபத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து சம்பவத்தில், ரயில் ஓட்டுநர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால்தான் ரயில் விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மின்சார ரயில்
சென்னை மின்சார ரயில்

By

Published : Apr 26, 2022, 4:33 PM IST

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் பணிமனையிலிருந்து 1ஆவது நடைமேடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) மின்சார ரயில் ஒன்று வந்தது. அப்போது திடீரென அந்த ரயில் தடம் புரண்டு நடைமேடை சுவரை இடித்து மேலே ஏறி நின்று விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சின் மற்றும் ஒரு பெட்டி, நடைமேடை மீது ஏறியதால் ஒன்றாவது நடைமேடை அருகே காத்திருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் பவித்ரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பணிமனையிலிருந்து வந்த ரயில் என்பதால் பயணிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து ஏற்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பவித்திரன் குடிபோதையில் ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்தினாரா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

3 பிரிவுகளில் வழக்கு:விபத்தில் சிக்கிய ரயிலின் பெட்டி, எஞ்சினை நடைமேடையிலிருந்து நேற்று அதிகாலை (ஏப்.25) துரிதமாக செயல்பட்டு ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279 உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல் மற்றும் ரயில்வே சட்டப்பிரிவுகளான 151 ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல், 154 ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமான செயலில் ஈடுபடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விபத்து தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலர் பிரேம்குமார் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓட்டுநர் வாக்குமூலம்:இந்நிலையில் ரயில் ஓட்டுநர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கவனக்குறைவாக இருந்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஓட்டுநர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலையில், ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின் ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவருக்கு மன நலம் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கையுடன் இணைக்கப்படும் எனவும் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து சமயத்தில் ரயில் எஞ்சின் பிரேக் செயல்படவில்லை என ஓட்டுநர் பவித்திரன் விசாரணையின் போது தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை தவறுதலாக அழுத்தியதை பவித்ரன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக ரயில்வே காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Video: கடற்கரை ரயில் நிலையத்தில் நடந்த விபத்து - வெளியானது சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details