தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்ட விரோதமாக வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்ததாக தொடர்ந்த வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு - சட்ட விரோதமாக வீட்டுமனைகள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 3:23 PM IST

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் பெரும் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தற்போதைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (மார்ச்.18) தீர்ப்பளித்துள்ளது. 2008ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டுமனைகளை தனது உறவினர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கும் ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி மீது கடந்த 2012ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள முறைகேடு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி சார்பில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான ஊழல் முறைகேடு புகார் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:கோவையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேரின் பிணை ரத்து - காவல்துறை நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் தரப்பில், விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு எந்த ஒரு நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும், உரிய ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் அப்போதைய சந்தை விலைக்குத் தான் வீடுகள் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தான் உடந்தையாக இருந்ததாக கூறும் புகாரில், எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வழக்கு தொடர்வதற்கு முன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி அமைச்சராக இருந்த தன் மீது வழக்கு தொடர சட்டமன்ற சபாநாயகரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும், முறைகேடு புகாருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

அவசரகதியில் அரசியல் உள்நோக்கத்தோடும், பழிவாங்கும் நோக்கத்துடனும் தொடரப்பட்ட முறைகேடு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடர சட்டமன்ற சபாநாயகரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுத்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் தொடரப்பட்ட வழக்கு என்பதால், அந்த வழக்கில் இருந்து அமைச்சரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். முறைகேடு வழக்கில் தண்டனை விதிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமியை நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாஜக தனித்து போட்டியிட விருப்பம்.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details