சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களில் வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து நாளை (மார்ச். 4) நடைபெற உள்ள மறைமுகத்தேர்தலில் மாநகராட்சி மேயர், துணை மேயர், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் பட்டியலின முதல் மேயர் வேட்பாளர் பிரியா தான் என திமுக தலைமை அறிவித்துள்ளது. எம்.காம் பட்டதாரியான இவர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 74ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு வயது 28. மேலும் திமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்திதான் பிரியா ராஜன். இவரது கணவர் பெயர் ராஜன். திமுகவில் நிர்வாகியாக உள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குப் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்தவர் மேயராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவரும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், நாளை சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
இவர் சென்னை மாநகராட்சிக்கு மூன்றாவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் பட்டியலின பெண் மேயர் ஆவார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேயர்!
வடசென்னை என்றாலே கூட்ட நெரிசல், சரியான சாலை வசதி இல்லாதது, கொசுத் தொல்லை, மக்களின் அத்தியாவசியத் தேவையான நீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்து முக்கியப் பிரச்னைகள் உள்ள இடத்திலிருந்து பிரியா முதல்முறையாக மாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வடசென்னையின் நீண்டகாலப் பிரச்னைகளை நிவர்த்தி செய்வாரா? ஆளுமைமிக்க மேயராக வலம் வருவாரா? என்ற கேள்விக்கு வருகின்ற காலத்தில் அவரே பதில் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயர்
முன்னர் பட்டியலினத்தைச் சார்ந்த ந.சிவராஜ் 20.11.1945அன்று சென்னை மாநகர மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 வரை மேயராக இருந்தார்.
நீதிக் கட்சியைத் தொடங்கியத் தலைவர்களுள் அவரும் ஒருவர். அம்பேத்கருடன் அரசியலில் இணைந்து பணியாற்றினார். பெரியாருக்கு 'பெரியார்' பட்டம் வழங்கிய அன்னை மீனாம்பாள் இவரது வாழ்விணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியின் மேயராக வை.பாலசுந்தரம் 1969–70ஆம் ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் 'அம்பேத்கர் மக்கள் இயக்கம்' என்ற கட்சியின் தலைவராக இருந்தார். இவரும் பட்டியலின மேயர் ஆவார்.
இதற்கிடையே சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பட்டியலின பெண் மேயராக வடசென்னையைச் சேர்ந்த பிரியா, நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதையும் படிங்க:மாநகராட்சிகளுக்கான திமுக மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு