சென்னை: ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2023-இல் முதற்கட்டமாக நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் இன்று (செப்.19) அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 8 இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்த ஆண்டில் முதற்கட்டமாக நடத்தப்படும்.
இக்கலை விழாவின் வாயிலாக சுமார் 3,000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன் பெறுவர். அதனைத் தொடர்ந்து சென்னையில் ஜனவரி 2024-இல் பொங்கல் பண்டிகையின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் பிரம்மாண்ட ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ பல்வேறு இடங்களில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட உள்ளது. இக்கலைவிழாவின் வாயிலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன் பெறுவர்.