சென்னை: சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜி என்கிற ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் ராஜேஷ்வரி பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். குறிப்பாக, ரயிலானது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கும்போது இறங்கி நடைமேடையில் ராஜேஷ்வரி பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அப்போது திடீரென ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சிலர், தங்கள் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை ரயில்வே போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ்வரி, நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு 4 கணவர் இருந்ததாகவும், அதில் மூன்றாவது கணவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டதாகவும், தற்போது இரண்டாவது கணவருடன் ராஜேஸ்வரி வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.