சென்னை:தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம், DMK Files என்ற பெயரில் திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். அதில், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி., டி.ஆர். பாலு எம்.பி. உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அண்ணாமலை வெளியிட்ட சொத்து விவரங்கள் போலியானவை என்று திமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அண்ணமலை மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தினர். திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டப் பலரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அண்ணாமலை மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், "1957ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.
எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரர் என்ற முறையில் சிறு முதலீடு செய்திருக்கிறேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: "அண்ணாமலையா? மக்குமலையா?" - கெடுவிதித்த ஆர்.எஸ். பாரதி