சென்னை:ஆவடி காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிகளான கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் ரவுடி முத்து சரவணன் என்பவர் மீது 6 கொலை வழக்குகளும், சதீஷ் மீது ஐந்து கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இவ்விரு குற்றவாளிகளும் சோழவரம் அருகே பாழடைந்த வீட்டில் பதுங்கி இருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரவுடிகளை போலீசார் பிடிக்க முற்பட்டபோது துப்பாக்கியால் போலீசாரை தாக்க முயற்சித்துள்ளனர். இதனால் போலீசார் எதிர் தாக்குதல் நடத்தியதில், இரண்டு ரவுடிகளையும் போலீசார் என்கவுண்டர் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் இருவரின் உடல்களையும் வாங்காமல் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும், ரவுடிகள் தாக்கியதில் காயம் அடைந்த மூன்று காவலர்களை டிஜிபி சங்கர் ஜிவால் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட பின்பு ஆர்.டி.ஓ முன்னிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. இதையடுத்து இருவரின் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடல்கள் ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.