சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து போலீஸ் போல நடித்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை (Chennai Robbery) அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நகை வியாபாரி, சுப்பாராவ். இவர் தனது மேலாளர் ரகுமான் ஆகியோர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் இன்று (பிப்.3) புகார் ஒன்றை அளித்தனர். அதில், 'ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்து மூலமாக இன்று காலை சென்னைக்கு வந்ததாகவும், சென்னை வால்டாக்ஸ் சாலையில் பேருந்தில் இறங்கி, அங்கிருந்து ரூ.1.40 கோடி பணத்துடன் வீரப்பன் சாலை வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன் தெரு, துரைசிங்கம் தெரு சந்திப்பில் கார் ஒன்று ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளது.
டிப்டாப்பாக காரில் இருந்து இறங்கிய கும்பல் ஆட்டோவையும் பையையும் சோதனையிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இருவரிடமும் தாங்கள் காவல்துறையயைச் சேர்ந்தவர்கள் எனவும்; உரிய ஆவணம் இல்லாமல் பணம் இருப்பது தொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது என சோதனை நடத்துவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியான இருவரும், காரில் லத்தி, கைவிலங்குகள் இருந்ததால் போலீஸ் என நினைத்து அவர்களிடம் இருந்த பணத்தை பையுடன் கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்றுகொண்ட அவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் நடந்தவைகள் குறித்தும் இழந்த தங்களின் பணத்தை மீட்டுத் தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்'.