சென்னை: வருமானவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று சென்னை செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டுச் சென்றனர்.
குறிப்பாக பொதுமக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை வருமானவரித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த இரண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கையையும், அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் 30 லட்சம் ரூபாய்க்கும் மேல் பரிவர்த்தனை மேற்கொண்ட நிலம் பத்திரப்பதிவு செய்த தனி நபர் வருமான வரி கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு மேற்கொண்டதில் கோடிக்கணக்கான ரூபாய் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை முடிவில் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நில பத்திரப்பதிவு தொடர்பாக நிதி பரிவர்த்தனை அறிக்கைகளில் கணக்கு காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது 2000 கோடி ரூபாய்க்கு மேல் பத்திரப்பதிவு தொடர்பான கணக்கை காட்டவில்லை என்பதையும் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.