சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் இன்று (நவ.27) காலை திரு.வி.க.நகர் மண்டலம், டிமெலஸ் சாலை, பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் இரவு சுமார் 7.30 மணியளவில் கொட்டும் மழையில் தியாகராய நகர், விஜயராகவாச்சாரி சாலைப் பகுதிகளில் கால்வாயில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜி.என். சாலை, பசுல்லா சாலை மற்றும் திருமலை சாலை ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த 200 ஆண்டுகளில் 3-வது முறையாக சென்னையில் 1,000 மி.மீ மழை பதிவாகியுள்ளது.