சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியர்களுக்கான பணி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்த நங்கநல்லூரை சேர்ந்த 58 வயது தலைமை பெண் செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து ஒய்வு பெற்றார்.
அரசின் புதிய விதிகளின் அடிப்படையில் இரண்டு மாத பணி நீட்டிப்பின் கீழ் மீண்டும் மருத்துவமனையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த 26 ம் தேதி திடீரென்று அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துமனை முதல்வர் ஜெயந்தி கூறும்போது, தலைமை செவிலியருக்கு கரோனா வைரஸ் தொற்று எதுவும் உறுதிச் செய்யப்படவில்லை. அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை இருந்த காரணத்தினால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாார் எனக் கூறினார்.
இறந்த செவிலியர் ஜோன் மேரிக்கு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்ய கொண்டுசெல்லப்பட்டது.
இதையும் படிங்க:ஈரோட்டில் 41 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா!