சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்.16) அறிவித்தது.
இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்று மதியம் 3.30 மணி அளவில் இருந்து மழையானது பெய்யத் தொடங்கியது. தற்போது சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழையானது கொட்டித் தீர்த்தது. சென்னையின் முக்கிய பகுதிகளான, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கனமழையானது பெய்தது.
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. இதன்பிறகு மதியம் 2 மணி அளவில் மேற்கு திசையின் காற்று மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னையை நோக்கி கருமேகம் படையெடுக்க ஆரம்பித்தது. இதனையடுத்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
போக்குவரத்து நெரிசல்: சென்னையில் இடைவிடாமல் மழை பெய்ததால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அனைவரும் மழையில் சிக்கினர். இதனால் சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, உள் வட்டச்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.