சென்னை:மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு விமான மூலம் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு, இவ்வாறு திருடிய செல்போன்களை கொல்கத்தாவில் விற்று வந்த 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரையும் சென்னை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கடந்த 4 நாட்களில் பயணிகளிடம் 22 செல்போன்களைத் திருடி கைவரிசை காட்டியது குறிப்பிடத்தக்கது.
செல்போன் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய சிறுவன்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், மாம்பலம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டதாக தொடர்ச்சியாக ரயில்வே காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இந்தப் புகாரின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடுபோன சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வடமாநில சிறுவன் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயணி ஒருவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது பதிவாகி இருந்தது.
லாட்ஜில் தங்கியிருந்த மேற்கு வங்க வாலிபர் கைது:இதனையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை உஷார்படுத்திய நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் அதே சிறுவன் செல்போன் திருட வந்தபோது அச்சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில், திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தங்கியிருந்த மற்றொரு வடமாநில வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனில்குமார் நோனியா(23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள லாட்ஜில் தங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.