சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்துகொண்டார். இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை.
ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனைச்சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது. “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!" என்று அண்ணா, 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.
அனுமதி மறுப்பு: செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்துவிடவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டப்பேரவையில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது.
அத்தனைக்குப் பிறகும் 'தமிழ்நாடு' என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. அண்ணா முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னை பிரதேசம்: "தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே, அத்தகைய தலைமகனான அண்ணா தலைமையில், கருணாநிதி, நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் போல இதுவும், ‘சென்னை பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.