சென்னையில் அதிகமாக வட மாநிலத்தவர் குடியிருக்கும் இடம் வேப்பேரி. கடந்த 11ஆம் தேதி அன்று அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வட மாநிலத்தவர் என்று நினைத்து ஒரு ஆங்கிலோ இந்தியன் நபரின் வீட்டை பூட்டிவிட்டு சுற்றுச்சுவரில் சுவரொட்டி ஒன்றை ஒட்டிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச் சென்றனர்.
அந்தச் சுவரொட்டியில் தமிழ் தேசிய கட்சி சார்பில் தமிழர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் வெளிமாநிலத்தவர்களின் நிறுவனங்களைப் பூட்டுவோம் என்றும் அவர்களை விரட்டுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் வேப்பேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.