தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை துறைமுகப் பொறுப்பு கழகத்தின் ரூ.100 கோடி மோசடி - 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளையில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் 100 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், வங்கி மேலாளர் உள்பட 18 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

By

Published : Nov 3, 2021, 8:15 PM IST

சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மூலம் கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது.

மூன்று நாள்களுக்குப் பின் கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் துணை இயக்குநர் எனக்கூறி, நிரந்தர வைப்புக் கணக்கில் உள்ள 100 கோடி ரூபாயை இருவேறு நடப்புக் கணக்குகளில் 50 கோடி ரூபாய் வீதம் மாற்றக்கோரி, போலியாக ஆவணங்களைத் தயார் செய்து கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளையில் அளித்தார்.

உடந்தையாக இருந்த வங்கி மேலாளர்

பின்னர் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் பெயரில் இரு நடப்புக் கணக்குகளை இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜாவின் உதவியுடன் கணேஷ் நடராஜனின் தரகரான மணிமொழி தொடங்கினார்.

தொடர்ந்து அவர் ஒரு நடப்புக் கணக்கில் மாற்றப்பட்ட 50 கோடி ரூபாயை 28 வங்கிக் கணக்குகளில் தொடர்ந்து மாற்றி வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த வங்கி அலுவலர்கள் துறைமுகப் பொறுப்புக்கழகத்தை கண்காணிக்கத் தொடங்கினர்.

மீண்டும் செல்வகுமார் என்பவருடன் பணத்தை மாற்ற வந்த மணிமொழியை கையும் களவுமாக துறைமுகம், வங்கி அலுவலர்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மோசடி செய்த கணேஷ் நடராஜன், மணிமொழி மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.

ரூ.100 கோடி மோசடி

இந்த விவகாரத்தில் துறைமுகப் பொறுப்புக் கழகமும், இந்தியன் வங்கியும் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஆறுமுகம் சிபிஐயில் புகார் அளித்தார்.

அவர் அளித்தப் புகாரின் பேரில் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, மோசடி செய்த கணேஷ் நடராஜன் மற்றும் மணிமொழி ஆகிய 3 பேர் மீதும் சிபிஐ கடந்த 2020 ஜூலை 31ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

விசாரணையில் 100 கோடி ரூபாயில் 45 கோடி ரூபாய் வரை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மணிமொழி மற்றும் கணேஷ் நடராஜன் மூலம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேருடைய 28 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. சோதனையில் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடிப்படையாக வைத்து மோசடியில் ஈடுபட்ட 9 பேரை, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சிபிஐ கைது செய்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தது.

18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த வழக்கின் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ராமாபுரத்தில் சிபிஐ சோதனை செய்தது. அதில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பெளசிமோ ஸ்டீவ் பெர்னார்ட் யானிக், முஸ்ஸா இலுங்கா லுசியன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் தங்கி இருந்துள்ளனர்.

இருவரிடமிருந்து மடிக்கணினி, செல்போன்கள், வைப்புத் தொகை தொடர்பான வங்கி ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் சென்னை துறைமுகம் மட்டுமல்லாது காமராஜர் துறைமுக வைப்பு நிதியையும் மோசடி செய்யத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கோயம்பேடு இந்தியன் வங்கி கிளை மேலாளராக இருந்த சேர்மதி ராஜா உள்பட 18 பேர் மீது சென்னை சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வைப்புத்தொகைக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி, இந்த டெண்டரை இந்தியன் வங்கி கோயம்பேடு கிளை மேலாளர் சேர்மதி ராஜா பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:திடீரென விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர்!

ABOUT THE AUTHOR

...view details