சென்னை: துறைமுகத்திற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கிக்கொள்ளாமல் செல்லவும், துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை மேம்பாலம் அமைக்க 2009 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் இதற்கான பணிகள் துவங்கி பாலத்திற்கான தூண்களும் அமைக்கப்பட்டன.
பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டம் எப்போது முடிவடையும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. மேம்பாலம் அமைக்கும் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்த காரணத்தால் திட்டத்திற்கான மதிப்பீடும் உயர்ந்து கொண்டே வந்தது இந்நிலையில் மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையேயான ஈரடுக்கு மேம்பாலத்திற்காக சென்னை கோயம்பேடு முதல் துறைமுகம் வரை அமைக்கப்பட்டுள்ள பழைய தூண்கள் வலுவிழந்த காரணத்தால் அவற்றை இடிக்க திட்டமிட்டுள்ளதாக துரைமுக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து துறைமுக அலுவலகத்தில் நேற்று சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பலிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2022-23 நிதி ஆண்டில் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் இருந்து 92 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த நிதி ஆண்டில் 150.26 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 13 வருடத்தில் இல்லாத அளவிற்கு 150 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் அடைந்துள்ளோம் என தெரிவித்தார்.