கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சென்னை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது காணப்பட்டது.
இரவு நேர ஊரடங்கில் வெளியே வந்தால் நடவடிக்கை: சென்னை காவல்துறை எச்சரிக்கை - இரவு ஊரடங்கில் வெளியே வந்தால் நடவடிக்கை
சென்னை: இரவு நேர ஊரடங்கின் போது வெளியே வரும் பொதுமக்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர், சில இடங்களில் ஆளில்லாத கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனர். சென்னையில் சுமார் 200 இடங்களில் வாகனச் சோதனை நடந்தது. 2 ஆயிரம் காவல்துறையினர் சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுமார் 500 வாகனங்களில் காவல்துறையினர் சென்னை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டன. அதிகாலை 4 மணிக்கு பிறகு தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.
ஏப்ரல் 20ஆம் தேதி இரவு நேர ஊரடங்கின் போது வெளியே வந்தவர்களின் விவரங்களை சேகரித்து வழக்கு ஏதும் பதியாமல் காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர். ஆனால், இனி ஊரடங்கின் போது வெளியே வருபவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.