சென்னை-யானைகவுனி பகுதியில் என்.எஸ்.சி.போஸ் சாலையில் காவல் ஆய்வாளர் வெங்கட்குமார் நேற்று இரவு ஒரு மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் கொரியர் சேவைக்குச் சொந்தமான மாருதி ஆம்னி வேன் ஒன்றில் பார்சல் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இது குறித்து சந்தேகமடைந்த ஆய்வாளர், அந்த தனியார் கொரியர் நிறுவன மேலாளர் முரளி என்பவரை அழைத்து விசாரித்தார்.
இதில் முரளி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், ஆய்வாளர் சந்தேகமடைந்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். அப்போதுதான் வேனில் இருந்த பார்சலில் முறைகேடாக பதுக்கல் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர்கள் ஜெயராமன், தணிக்கைவேல் ஆகியோரை வரவழைத்து, பார்சலை சோதனை செய்தபோது, இரண்டு தங்கக் கட்டிகள்(2 கிலோ), மூன்று சிறிய தங்க காசு(50கிராம்) இருப்பது தெரியவந்தது.