சென்னை:2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, '2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் 16 ஆயிரம் காவல் துறையினர் மற்றும் ஆயிரத்து 500 ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். 368 இடங்களில் வாகனச் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேஸிங்கில் ஈடுபடுவர்களை கண்காணிக்க 28 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 53 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களைக்கொண்டு தொடர் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடவுள்ளனர்.
பைக் ரேஸிங் மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 25ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாக 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் வருகிற 31ஆம் தேதி இரவு அசம்பாவிதங்களை தடுக்க அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரைகளில் வாட்ச் டவர், நைட் விஷன் டிரோன் கேமராக்கள், குதிரைப்படை உள்ளிட்டவை பயன்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
வருகிற 31ஆம் தேதி இரவு கடலுக்குள் செல்லவோ, குளிக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இரவு 8 மணி முதல் ஆர்.பி.ஐ முதல் லைட் ஹவுஸ் வரையிலான காமராஜர் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. புத்தாண்டை கொண்டாட வருபவர்களின் போக்குவரத்து பார்க்கிங் வாலாஜா சாலை, சிவானந்தா சாலை உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், கரோனா விதிகளை பின்பற்ற வேண்டும், 80 விழுக்காடு நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டுமே பார்ட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.