தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மாசம் வாடகை கட், உணவு, ரூ.7,500...! - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மனிதநேய காவலர்

சென்னை: ஊரடங்கால் அவதிப்பட்டுவந்த ஐந்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் மூன்று மாதங்களாக வாடகை வாங்காமல் அவர்களுக்கு உணவளித்து அவர்களின் துயர் துடைத்த, காவலரின் மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police
police

By

Published : May 30, 2020, 9:21 AM IST

சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்துவருபவர் ரஞ்சித் குமார். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராகப் பணியாற்றிவருகிறார். இவரது வீட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஐந்து பேர் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்துள்ளனர்.

ஊரடங்கால் தவித்த தொழிலாளர்கள்

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டதால், இவர்கள் ஐந்து பேரும் அவர்களின் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவித்தனர். அதுமட்டுமின்றி வீட்டின் வாடகை தர முடியாமலும், உணவில்லாமலும் தவித்துவந்துள்ளனர்.

வாடகை இல்லாமல் 3 வேளையும் உணவு

வேலையிழந்து, உணவில்லாமல் தவித்த அவர்களின் வேதனையை உணர்ந்த ரஞ்சித் குமார், மூன்று மாதமாக வீட்டிற்கு வாடகை வாங்காமல் இவர்களைத் தங்கவைத்துள்ளார். மேலும் அவர்கள் உணவில்லாமல் தவித்துவந்ததால் ரஞ்சித் குமார் வீட்டிலேயே சமையல் செய்து கொடுத்து, இவர்களின் பசியைப் போக்கியுள்ளார்.

வடமாநிலத் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ரஞ்சித் குமார்

தற்போது வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனையடுத்து ரஞ்சித் குமார் வீட்டில் குடியிருந்த ஐந்து தொழிலாளர்களையும் சொந்த ஊருக்கு அனுப்ப காவல் நிலையத்தில் அனுமதி வாங்கி சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊரான பிகாருக்குச் செல்ல ஏற்பாடுசெய்தார்.

இது மட்டுமல்லாமல் அவர்களுக்குச் செலவுக்காக ரூ.7,500 பணமும், ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.

நன்றி தெரிவித்த வடமாநிலத் தொழிலாளர்கள்

இந்த இக்கட்டான நேரத்தில் மனித நேயத்தோடு செயல்பட்டு, வடமாநிலத் தொழிலாளர்களின் உணவு, அத்தியாவசிய தேவையைப் பூர்த்திசெய்த காவலர் ரஞ்சித் குமாருக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்த சக காவலர்கள், உயர் காவல் அலுவலர்களும் ரஞ்சித் குமாரை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

இதையும் படிங்க:பிரசவ வலியால் துடித்த பெண் - உடனடியாக உதவிய காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details