தமிழ்நாடு

tamil nadu

தனியாக இருக்கும் மூதாட்டிகளே குறி! ஆதம்பாக்கம் கொலை வழக்கில் கொலையாளி செய்த பயங்கரம்

By

Published : Apr 24, 2023, 9:44 PM IST

சென்னை ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கில் சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் செய்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளியான சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுக்கு வாடகை கொடுக்கப் பணம் இல்லாததால் வீட்டு உரிமையாளரான மூதாட்டியை தலையணையால் அழுத்திக் கொலை செய்த இவர் இதனை பல இடங்களில் வாடிக்கையாக செய்து வந்துள்ளார் என்பது திடுக்கிட வைத்துள்ளது.

எளிதாகப் பணம் சம்பாதிக்க எண்ணிய இவர், தொடர்ச்சியாக மூதாட்டியை கொலை செய்து லட்சக்கணக்கில் நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பியது தெரியவந்துள்ளது. ஆனால், தப்பிக்க பயன்படுத்திய குடையாலேயே அவரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

சிசிடிவி காட்சியில் பதிவான குற்றவாளி சக்திவேல்

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 12வது தெருவைச் சேர்ந்தவர், சிவகாமி சுந்தரி(81). இவர் தனது மகன் ஸ்ரீராம் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அனைவரும் வேலைக்குச் சென்ற நிலையில், மூதாட்டி சிவகாமி சுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர், அன்றிரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த அவரது மகன் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ.2.5 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது, தாய் சிவகாமி சுந்தரியை எழுப்பச் சென்றபோது அவர்கள் அணிந்திருந்த 15 சவரன் நகைகள் பறிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவாறு கிடந்துள்ளதைக் கண்டும் மேலும் அதிர்ச்சியடைந்தார்.

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கில் கைதான சக்திவேல்

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிசிடிவியில் முகம் பதியாதபடி மழை குடையுடன் வந்த நபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு, பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சிசிடிவி எங்கே உள்ளது என சரியாக கணித்து குடையை வைத்து கொள்ளையன் மறைந்து வந்ததால் ஏற்கனவே வீட்டை நோட்டமிட்டு பின்னர் கொள்ளையடித்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து, அதே தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

குறிப்பாக, குடையுடன் அந்த நபர் சென்ற வழித்தடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, திருவல்லிக்கேணி பகுதிக்கு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த ஆட்டோவில் பதிவான எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்து, அவர் அந்த நபரை இறக்கிவிட்ட இடத்தைக் கண்டுபிடித்து ஒரு கட்டத்தில் அந்த நபரின் வீட்டை கண்டறிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டியைக் கொலை செய்த நபர் கே.கே.நகரை சேர்ந்த சக்திவேல் என்பதும் திருமணமாகி 2 பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து கொண்டு அவர் கட்டட உள்கட்டமைப்பு பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சக்திவேலிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 'விலங்கு' வெப் சீரிஸ் பாணியில் ஒரு கொலை செய்யவில்லை, இரண்டு கொலை செய்துள்ளேன் என அடுக்கடுக்காக சக்திவேல் கொலை பட்டியலிட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

குறிப்பாக, மூதாட்டியை மட்டுமே குறிவைத்து, கடந்த இரண்டு வருடங்களில் 2 கொலை செய்திருப்பதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை சக்திவேல் தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தின் போது, வேலை இல்லாததால் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு குடும்பத்தைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பணத்திற்காக கே.கே.நகரை சேர்ந்த மூதாட்டி சீதாலட்சுமியை வீட்டில் யாருமில்லாத போது சக்திவேல் கொலை செய்து 12 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கொலை செய்வதற்கு முன்னதாகவே, சக்திவேல் மூதாட்டிகளின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடிப்பது போல நோட்டமிட்டு, பின்னர் மூன்று நாட்கள் கழித்து வீடு புகுந்து, தலையணை வைத்து அமுக்கி மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை பறிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கொலை சம்பவத்தின் போது, சிசிடிவி காட்சிகளில் பதியாத படி கொள்ளையில் ஈடுபட்டதால் போலீசார் இரண்டு வருடங்களாக சக்திவேலை பிடிக்க முடியாமல் திணறி வந்ததாகவும், மேலும் முதியவர் தடுக்கி விழுந்து மரணமடைந்ததாக நினைத்து உறவினர்கள் புகார் கொடுக்காததால் போலீசாரிடம் சிக்காமல் இருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால், கட்டட வேலையில் பணம் கிடைப்பதை விட கொள்ளையில் ஈடுபட்டால் போலீசாரிடம் சிக்காமல், எளிதாகப் பணம் கிடைப்பதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்தில் மீண்டும் சக்திவேலுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திணறியதால், மீண்டும் தனது பாணியில் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டு, ஆதம்பாக்கத்தில் உள்ள சிவகாமி சுந்தரி என்பவரின் வீட்டில் புகுந்து மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு ரூ.2.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக சக்திவேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொள்ளையடித்த பணத்தை எடுத்துச் சென்று திருவல்லிக்கேணியில் உள்ள உரிமையாளரிடம் வீட்டு வாடகை கொடுக்கச் சென்றபோது சிசிடிவி காட்சிகளில் சக்திவேல் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சக்திவேலிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதேபோல, இவை தவிர வேறு மூதாட்டியை ஏதும் சக்திவேல் கொலை செய்துள்ளாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து தலையணையால் அழுத்தி அவர்களை கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற பயங்கரமான குற்றவாளி சக்திவேல் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சென்னையில் மூதாட்டிகளுடன் வசிக்கும் குடும்பத்தினர் பீதியடைந்துள்ளனர்.

சிசிடிவி காட்சியில் பதிவான குற்றவாளி சக்திவேல்

இதையும் படிங்க:ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details