சென்னை: மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 11.20 மணியளவில் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (ஜூலை 24) காலை 11 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தகவல் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனே கட்டுப்பாட்டு அறை காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சிஎம்பிடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சிஎம்பிடி போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் சென்று சிஎம்பிடி பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணிநேரம் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணைக் கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் 11.20 மணிக்கு போன் செய்து 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கூறியதால் போலீசார் குழப்பமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் போலீசாரை தாக்கிய குதிரை ஓட்டுநர் கைது:இந்த நிலையில், மதுபோதையில் சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கிய குதிரை ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (27). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று தீபக் தனது நண்பருடன் மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரைக்கு வந்துள்ளார்.