சென்னை:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நேற்று (டிச.31) நள்ளிரவோடு முடிவடைந்து, 2024 புத்தாண்டு பிறந்தது. அந்த வகையில் 2024 புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
சென்னையின் கடற்கரை பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், நீலாங்கரை உட்பட முக்கியமான அனைத்து கடற்கரைகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, நள்ளிரவு 12 மணிக்கு உற்சாகமாக ஒரே குரலில் ‘ஹேப்பி நியூ இயர்’ என உற்சாக முழக்கமிட்டனர். மேலும், கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது பக்கம் இருக்க, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாகனத்தில் அதிவேகமாக செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, வழக்குப் பதிவு செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகர போலீசார் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். அதன்படி, கொண்டாட்டத்தில் விதிகளை மீறியவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார்அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18 ஆயிரம் காவல் துறையினர்கள் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை காவல் துறை சார்பில், மக்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த புத்தாண்டை கொண்டாடுவதில் மக்கள் பொறுப்பையும் அக்கறையையும் காட்டி உள்ளனர். போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருந்தமைக்கு நன்றி. நீங்கள் சென்னை நகரத்தின் பெருமை” என பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் களைகட்டிய '2024' புத்தாண்டு கொண்டாட்டம்!