சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிக்கான லீக் போட்டியில், இன்று (அக்.23) பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடந்து வருகிறது. போட்டியானது மதியம் 2 மணி அளவில் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாக சுமார் 12 மணி அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்திருந்தனர்.
அப்பொழுது மைதானத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தகுந்த சோதனைக்கு பின்பு ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்குள் அனுமதிக்கபட்டனர். மேலும் மைதானத்திற்கு வரும் ஒரு சில ரசிகர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி எதிர்ப்புகளை தெரிவிக்க இருப்பதாகவும், உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர்.
இதனால் ஒவ்வொரு ரசிகர்களும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே, மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவர், ரசிகர்கள் கொண்டு வந்த இந்திய தேசிய கொடியை பறிமுதல் செய்து, அங்கிருக்கும் குப்பை தொட்டியில் போட முயன்றுள்ளார்.
உடனே அங்கிருந்து ரசிகர்கள், தேசியக்கொடியை குப்பை தொட்டியில் விசாதீர்கள் என கூச்சலிட்டுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட உதவி ஆய்வாளர், தேசியக்கொடிகளை கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்த காவலர் வாகனத்திற்கு பின்னால் சென்று நின்றுகொண்டார்.
மேலும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெறுவதால், தங்களை இந்திய தேசிய கொடியை உள்ளே கொண்டு செல்ல காவல்துறை அனுமதிக்காததாக, ரசிகர்கள் குற்றம் சாட்டினர். தற்போது, இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், அதற்கு காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
அதில், போட்டியின் போது மத்திய அரசை விமர்சிக்கும் விதமாகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் கொண்டு செல்வதை தடுக்கும் விதமாகவுமே காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் என்பவர் அதை தவறாக புரிந்து கொண்டு, தேசிய கொடியை பறிமுதல் செய்து இருப்பதாக விளக்கம் அளித்தனர்.
மேலும், ரசிகர்கள் அனைவரும் தேசிய கொடியை மைதானத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்கள் மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடியை கொண்டு செல்ல மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறியது தவறான தகவல்.
இந்த நிலையில், தேசிய கொடியை குப்பை தொட்டியில் வீச முயன்ற செம்பியம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணிபுரியும் நாகராஜ் என்பவர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திடீரென கூடும் 'திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்'.. பின்னணி என்ன?