சென்னை: வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான கட்டுப்பாட்டு மையம் வேளச்சேரி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ. 32 லட்சம் செலவில் 55 இடங்களில், வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று 24 லட்ச ரூபாய் செலவில், திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் 124 சிசிடிவி கேமராக்கள் 47 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கான சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் திருவான்மியூர் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (ஜூன் 8) சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
பின்னர் இது குறித்து பேசிய சென்னை காவல் ஆணையர், “இந்த சிசிடிவி அமைக்கும் நிதியில் 6 லட்சம் ரூபாய் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து மொத்தமாக 274 சிசிடிவி காட்சிகளை இணையத்தின் மூலம் நேரலையாக காணும் வழியில் ஜி.பி.எஸ் தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட சிசிடிவி காட்சி பொருத்தப்பட்டுள்ளது”.
இது போன்று, கடந்த ஆண்டு மட்டும் 2,100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 424 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது கண்ணாக சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு மட்டுமல்லாமல், பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக, தமிழக அரசு 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.