தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி - போக்சோ வழக்கு குறித்து சிறப்பு பயிற்சி வகுப்பு

சென்னையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கி காவலர்களுக்கு போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட கையாளும் வகையில் 9 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

போக்சோ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி
போக்சோ வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

By

Published : Apr 2, 2022, 10:08 PM IST

சென்னை:சென்னை காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளவும், வழக்குகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் மேலும் திறம்பட புலனாய்வு மேற்கொள்ளவும், பெண் காவல் அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் மாநில நீதித்துறை அகாடமி இயக்குநர் லிங்கேஸ்வரன், பெண்கள் உதவி மையத்தைச் சேர்ந்த ஷெரின் போஸ்கோ மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்துரு, பெண் வழக்கறிஞர் ஆதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

9 நாட்கள் பயிற்சி: குறிப்பாக போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்த விளக்கங்கள், விசாரணை அலுவலர்கள் போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள், நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து புலனாய்வு மேற்கொள்ளுதல், கோப்புகள் கையாளுதல், பாதிக்கப்பட்ட சிறுமிகளை கையாளுதல், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்பட இந்த வழக்குகளின் முழு புலனாய்வு முறை குறித்துப் பயிற்சி அளித்து காவல் அலுவலர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் மேடைப் பேச்சு

பயிற்சி வகுப்புக்கு முன்னதாக மேடையில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "போக்சோ வழக்குகளை மேலும் திறம்பட புலனாய்வு செய்யும் வகையில், வழக்கை விசாரிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் குறித்து விளக்கி, சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

உரிய சட்ட நடவடிக்கை:இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் உள்ளடக்கி அடுத்த ஒன்பது நாட்கள் பயிற்சி வகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு நீதிபதி, சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என அனைத்துத்துறை அனுபவம்மிக்கவர்களையும் வைத்து நடத்தப்பட உள்ளது. இதில் காவல் துறையினர் தங்களுக்கு போக்சோ வழக்குகளில் எழும் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும் அவர், "சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குட் டச், பேட் டச் (Good Touch, Bad Touch) குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்பை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் டிராபிக் சிக்னல்களுக்கு ஒத்திகை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details