சென்னை:காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவில் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 25 நபர்கள் கைது செய்யப்பட்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும், ஆவணங்களும், போலி அரசு முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூன் 4) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக போலி நியமன ஆணைகளை கொடுத்து, அதற்காக போலி அரசு முத்திரிகளை பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பல் குறித்து விளக்கினார். இதுபோன்ற வழக்குகளில் அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களான அலுவலக உதவியாளர்கள் பலரது தொடர்பு இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஒரு வருடத்தில் 79 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் இந்த ஒரு வருடத்தில் 190 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.