சென்னை காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் செல்போன் பறிப்பு புகார்கள், தொலைந்துப்போகும் செல்போன்கள், வீட்டிலிருந்து திருட்டுப்போகும் செல்போன்கள் குறித்த புகார்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்து பெரும்பாலான செல்போன்களை கண்டுபிடித்துவருகின்றனர்.
ஆனால் பெரும்பாலான செல்போன்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகே காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படுகிறது. இதில் பல செல்போன்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறிவருகின்றனர்.
ஏனென்றால் காணாமல்போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ விவரங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினருக்கு அனுப்ப வேண்டும்.
பின்னர் சைபர் கிரைம் காவல்துறையினர் குறிப்பிட்ட நெட்வொர்க் நிறுவனங்களிடம் அந்த ஐ.எம்.இ.ஐ எண்களை அனுப்பி விவரங்களை எடுத்து தொலைந்துபோன செல்போனை கண்டுபிடித்து வருகின்றனர். இதனால் கூடுதல் நேரம் ஆகிறது. இதனால் காவல் நிலையங்களில் செல்போன் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்காமல் இருந்துவந்தனர்.
ஆனால் தற்போது செல்போன் தொடர்பான புகார்கள் காவல்நிலையங்களில் வரும்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினரே நேரடியாக ஐ.எம்.இ.ஐ எண்களை குறிப்பிட்ட நெட்வொர்க் நிறுவனங்களிடம் அனுப்பும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் செல்போன் சம்பந்தப்பட்ட புகார்களில் ஈடுபட்டிருக்கும் குற்றவாளியை பிடித்து வழக்கை எளிதாக பிடிக்க முடியும் என காவல்துறை நம்புகிறது.
அதாவது செல்போன் சம்பந்தமான புகார்களை காவல்துறையினர் பெற்ற பின்பு கூகுள் ஷீட்டில் ஐ.எம்.இ.ஐ உள்பட நபர்களின் முழுவிவரங்களை பதிவிட வேண்டும். மேலும் இந்த விவரங்களை காவல் நிலைய மின்னஞ்சல் மூலமாக மட்டுமே சம்பந்தப்பட்ட நெட்வொர்க் நிறுவனங்களிடம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நெட்வொர்க் நிறுவனங்களிடம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும் எனவும் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தவுடன் அவரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட செல்போன், இருசக்கர வாகன விவரங்களையும் முறையாக பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இருவர் கைது