சென்னை காவல் ஆணையரகத்தில் தொடங்கப்பட்டுள்ள இலவச கரோனா தடுப்பூசி முகாமை, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை காவல் துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அனைத்து இடங்களிலும் கரோனா குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 8ஆம் தேதி முதல் இன்றுவரை சுமார் 6000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92இல் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறுவதால், அங்குப் பாதுகாப்புக்காகத் துணை ராணுவம், சிறப்புக் காவல்படை, உள்ளூர் காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக பணியில் இருப்பதால், ஒரு நாளைக்கு 13 முதல் 15 காவலர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரை சென்னையில் 8 ஆயிரத்து 500 காவல் துறையினருக்குத் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றினால் முழு ஊரடங்கு நிலையைத் தவிர்க்கலாம். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்பதைக் கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:’சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ - பீலா ராஜேஷ்