தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

22 வயதில் செய்த கொலைக்கு 54 வயதில் சிறை தண்டனை.. ஒடிசா சென்ற தமிழக தனிப்படையின் பின்னணி என்ன?

Murderer after years: 1995ஆம் ஆண்டு ஆதம்பாக்கம் பகுதியில் மாமியாரை கொலை செய்துவிட்டு ஒடிசாவிற்கு தப்பி ஓடிய நபரை, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 4:15 PM IST


சென்னை:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர், ஹரிஹர பட்டா ஜோஷி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து கிண்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 15வது தெருவைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்ணை காதலித்து, 1994ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்குப் பின் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், மனைவி இந்திரா தனது தாய் ரமாவின் வீட்டுக்குச் சென்று விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர பட்டா ஜோஷி, கடந்த 1995ஆம் ஆண்டு மாமியார் ரமாவின் வீட்டிற்கு நேரில் சென்று, வீட்டில் இருந்த மனைவி இந்திரா மற்றும் இந்திராவின் சகோதரர் கார்த்திக் ஆகியோரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் ரத்தக் காயத்துடன் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் வீட்டிலிருந்த மாமியார் ரமாவை ஹரிஹர பட்டா ஜோஷி, கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹர பட்டா ஜோஷியை காவல் துரையினர் தேடி வந்தனர்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ஆதம்பாக்கம் காவல் நிலைய காவல் குழுவினர், அவரின் சொந்த ஊரான ஒடிசா மாநிலம், கஞ்சா மாவட்டத்திற்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பின் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தலைமறைவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டடது.

இதையும் படிங்க: தென்காசியில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற 7 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம்!

இதைத் தொடர்ந்து, அந்நபரை பிடிக்க ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவின் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில், தலைமைக் காவலர் பாலமுருகன், முதல்நிலைக் காவலர் எட்வின் தீபக் மற்றும் காவலர் மணிவண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 22 வயதில் எடுக்கப்பட்ட அந்நபரின் கருப்பு வெள்ளை நிற புகைப்படம் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, ஒடிசா மாநிலம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் விவேக் ஒத்துழைப்புடன், ஒடிசா மாநில காவல் துறையினரின் ஒருங்கிணைப்புடன், தனிப்படையினர் சுமார் பத்து நாட்கள் முகாமிட்டு அவரைத் தேடி வந்துள்ளனர்.

பல இடங்களில் விசாரணை செய்து தீவிர தேடுதலில் ஈடுபட்டதை தொடர்ந்து, கஞ்சம் மாவட்டத்தில் வைத்து அந்நபரை இந்த குழு கைது செய்தது. மேலும், விசாரணையில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஹரிஹர பட்டா ஜோஷி, ஒடிசா மாநில பெஹ்ராம்பூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹரிஹர பட்டா ஜோஷி, நேற்று ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளின்படி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து விசாரணைக்கு பின் ஆதம்பாக்கம் போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடி செய்த பலே ஜோதிடர்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details