சென்னை: வெளியூர்களில் இருந்து வேலைத்தேடி சென்னை நகருக்கு வரும் சில அப்பாவி இளம்பெண்களிடம் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் சில கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லோகாண்டோ மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி சட்ட விரோதமாக பாலியல் தொழிலை சில கும்பல் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தி வரும் போலீசார் அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை பாண்டிபஜார் காவல் நிலைய போலீசார் தியாகராய நகர் சதாசிவம் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சஜின் ( வயது 23), கேரளா மாநிலத்தை சேர்ந்த அனுப்குமார் ( வயது 25) ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் ரூ.8,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.