சென்னை: சென்னை மாநகராட்சி 59 ஆவது வார்டு திமுக பெண் கவுன்சிலரான சரஸ்வதி கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலகம் வழியாக சர்ச்சுக்கு தனது கணவரோடு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் ரெயின் கோட் அணிந்து கொண்டு முகம் தெரியாதவாறு வேகமாக வந்து பெண் கவுன்சிலர் சரஸ்வதியின் கழுத்தில் உள்ள செயினை பறிக்க முயன்றுள்ளனர்.
செயின் பறிக்கும் பொழுது கொள்ளையர்களிடம் போராடி கழுத்தில் உள்ள அனைத்து செயின்களையும் பறிக்க முடியாத படி சரஸ்வதி தடுத்துள்ளார். இருப்பினும் செயின் பறிப்பு கொள்ளையர்கள் 3 1/2 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். உடனடியாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்ததில் செயின் பறித்த கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம் மண்ணடியில் திருடு போன வாகனம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் செயின் பறிப்பு கொள்ளையர்கள் செல்லும் இடங்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு அடுத்தடுத்து போலீசார் கண்டுபிடித்தனர்.
ரெயின் கோட்டுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றும் இரண்டு செயின் பறிப்பு கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில், அவர்கள் தண்டையார் பேட்டையை சேர்ந்த அப்துல் ஜாபர்(18) மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
செயின் பறித்த சந்தோஷத்தில் கையை விரித்து ஆகாசத்தில் பறப்பது போல் சாகசம் செய்து கொண்டே இரு சக்கர வாகனத்தில் 120 கி.மீ வேகத்தில் தப்பி செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.