சென்னை:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிரட்டிச் சென்ற மிக்ஜாம் (Michaung) புயலின் தாண்டவத்தால், தொடர்ந்து சென்னை வீழ்ந்து விட்டது என்றாலும் மெதுவாக அது மீண்டெழுந்து வருகிறது. இருப்பினும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ள நீரானது வடியவில்லை.
மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு, ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (டிச.07) ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
புயலானது சென்னையை விட்டு ஆந்திராவில் கரையைக் கடந்தாலும், அதன் பாதிப்பின் தடங்கள் மக்களின் மனதில் இன்னும் வடுவாக இருந்து வருகிறது. மழை ஓய்ந்த பிறகும், பலரின் இயல்பு வாழ்க்கை தற்போதும் மோசமாகவே உள்ளது. இதில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளே பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வேளச்சேரி, மணலி, மடிப்பாக்கம், மனப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், புளியந்தோப்பு, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மற்றும் இயற்கை உபாதைகளுக்குக் கூட இடமின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.