தமிழ் சினிமாவின் 80-களில் வேலையில்லா ஹீரோக்கள் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்று பாடினார்கள். பின் சிறுவர்கள் விளையாடும் இடமாகவும், லவ் ஜோடி சந்திக்கும் இடமாகவும் மொட்டை மாடி மாறிப்போனது.
நானோ செகண்டுகளிலும் நேரத்தை கணக்கிடும் 21ஆம் நூற்றாண்டின் அவசர உலகில், மொட்டை மாடி துணி காயும் இடமாகவும், தனியாக கைப்பேசியில் உரையாடும் இடமாகவும் மாறிப்போனது. வீட்டின் அறைகளில் வாழும் கூட்டுப்பறவைகளாய் அடைந்து கிடந்த சென்னைவாசிகளை கோவிட்-19 மொட்டை மாடிகளுக்கு அழைத்து வந்திருக்கிறது.
நாம் வானத்துக்குக் கீழே வாழ்கிறோம் என்பதே சென்னை நகர மக்களுக்கு மறந்து போயிருக்கும். அன்றாட வாழ்க்கையின் அவசர வேலைகளைத் தொடங்கும்போதும், சாலைகளில் விரையும்போதும் அலுவலகங்களிலும் கடைகளிலும் கண்டும் காணாமல் கடந்துபோகும் வானம் மொட்டை மாடியில் இப்போது புதிய வானமாக பலருக்குத் தெரிகிறது.
வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற ஊரடங்கு உத்தரவு, மாலைப் பொழுதுகளில் குடும்பங்களை மொட்டை மாடிகளுக்கு இழுத்து வந்திருக்கிறது. தற்போது குழந்தைகள் குதூகலமாக விளையாடும் இடமாகவும், இளைஞர்களும் மூத்த தலைமுறையினரும் கூடிக் கதைபேசும் அரங்கமாகவும் மொட்டைமாடி மாறியுள்ளது.
மாலை நேரத்தை மொட்டை மாடிகளில் செலவிடும் மக்கள் பின்பனிக்காலத்து பாதி நிலா, இன்னும் ஊரடங்கு உத்தரவுக்கு உட்படாத வங்காள விரிகுடாக் காற்று, பறவைகள் பாட்டு உள்ளிட்டவை மொட்டை மாடி தரும் புதிய அனுபவங்கள். அன்று வந்ததும் அதே நிலாதான்! இன்று வந்ததும் அதே நிலாதான்! ஆனால், சென்னையின் சாலைகள் வெறிச்சோடியும், மொட்டை மாடிகள் கூட்டமாகவும் உள்ள புதிய நிலாக்காலம் இப்போது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாலை தொடங்கி இரவு வரையான நேரங்களில் பெரும்பாலானோர் தனி நபர் விலகலைப் பின்பற்றி மொட்டை மாடிகளில் கழித்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை அரசு உத்தரவுப்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், தேவையின்றி வெளியே செல்வோர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுப்பதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். அதுவே, நாட்டிற்கும் நல்லது என்பதாலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்பதாலும் வேறு வழியின்றி மக்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.
பல தொலைக்காட்சிகள் பிரபலமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வீட்டிற்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்க முயற்சித்து வருகின்றன. இருப்பினும் வீட்டினுள் அடைபட்டிருக்க விரும்பாத பலர் மாலை நேரங்களை மொட்டை மாடிகளில் செலவு செய்யத் தொடங்கியுள்ளனர். சென்னை போன்ற நகரங்களில் அருகில் குடியிருப்பவர் யார்? என்று தெரியாத அளவு பரபரப்பான வாழ்கையையே பொதுவாக பலரும் வாழ்ந்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் கூட திரையரங்கம், வணிக வளாகங்கள், தொலைக்காட்சி போன்றவற்றில் நேரங்களை செலவு செய்யும் மக்கள் அதிகம். இந்த சூழ்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கைத் தொடர்ந்து, நகர வாழ்க்கையில் சிக்கித் தவித்த மக்கள் அருகில் குடியிருப்பவருடன் பேசுவதற்கு நேரம் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
மொட்டை மாடியில் கூடும் சிலர் தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மொபைல் போன்றவற்றால் அழுத்துப்போன மக்கள் மொட்டை மாடியில் கூடுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. கரோனா வைரஸ் தினசரி வாழ்க்கையை பாதித்திருந்தாலும், நமது உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த இது ஒரு நல்ல தருணமாக அமைந்துள்ளது. அருகே குடியிருப்பவர்களுடனான உறவுப் பிணைப்பை இந்த ஊரடங்கு பலப்படுத்தும் என்றே சொல்லவேண்டும்.
இதையும் படிங்க:கரோனா தொற்று: இந்தியாவில் ஏழைகளின் அவலநிலை - கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்