சென்னையில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. நோய் தொற்று குறைப்பதற்கு மாநகராட்சி, சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலம் தொடங்கியதால் மழைநீர் சேகரிக்கவும், சாலையில் நீர் தேங்காமல் இருக்கவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 29ஆம் தேதியில் இருந்து சென்னையில் அதிக மழை பொழிவு பதிவு ஆகிவருகிறது. அதிக அளவில் மழை பொழிவதால் மாநகராட்சியில் உள்ள சாலைகள் அதிக அளவில் பாதிப்பு அடைகிறது. குறிப்பாக பாலவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் அனைத்தும் மழையால் பாதிப்பு அடைந்துள்ளது. சாலைகள் அனைத்தும் பாதிப்பு அடைந்ததால் மழைநீர் அங்கயே தேங்கிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன் ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சி தரமான சாலைகள் போடுவது இல்லை, பாதிக்கப்பட்ட சாலை மீதே புதிய சாலை போட்டு வருகின்றனர் என அறப்போர் இயக்கம் ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சி வடிகால் மற்றும் சாலைகளுக்கு 4 ஆயிரத்தில் இருந்து 5000 ரூபாய்வரை செலவுசெய்துள்ளது. இவ்வளவு செலவு செய்தும் சாலைகளும் வடிகால் சரியாக இல்லை. இதற்கான முக்கிய காரணம் அமைச்சர் வேலுமணி அவருக்கு தெரிந்தவருக்கு மட்டுமே டெண்டர் தருவதால் மேலும் சாலைகளை முழுமையாக எடுத்துவிட்டு புதிய சாலை அமைப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட சாலை மீதே புதிய சாலை போடுவதுதான். மாநகராட்சி சாலைகள் எங்கெல்லாம் சேதம் அடைந்துள்ளதோ அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து. புதிய சாலை அமைக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அந்த சாலை தரமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.