சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டிலேயே முடங்கியிருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாக ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வெளியே உலாவி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பாடி மேம்பாலத்தின் நான்கு புறங்களிலிருந்தும் வாகனங்கள் சாரை சாரையாக வந்தன. இருந்த போதிலும், இப்பகுதியில் வில்லிவாக்கம், திருமங்கலம், கொரட்டூர், ராஜமங்கலம் ஆகிய காவல் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களை வழி மடக்கி எதற்காக, எங்கு செல்கிறீர்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.