சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் தனது வீட்டில் 350க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட செடிகளை வளர்த்து 35 வருடங்களாக பராமரித்து வருகிறார். இதில் 10க்கும் அதிகமான அரியவகை செடிகளையும் வளர்த்து வருகிறார். செம்மரம், கற்பூரம், திருஓடு, இனிப்பு துளசி போன்ற அரிய வகை செடிகளையும் பராமரித்து வளர்த்து வரும் இவர், இங்குள்ள ஒவ்வொரு செடிகளும் ஒரு மருத்துவ குணம் கொண்டவை என தெரிவிக்கிறார்.
மருத்துவ குணம் கொண்ட செடிகள் தவிர காய்கறி, பழவகை செடிகளையும் தனது மாடித் தோட்டத்தில் பராமரித்து வருகிறார். மேலும் இயற்கை எரிவாயு தயாரிப்பு, சூரிய மின்சக்தி, மர வீடு என தன் வீடு முழுவதும் இயற்கை வழியில் நிறுவி அதன் மூலம் பயனடைந்து வருகிறார். இதில் இன்னும் வியப்பான விஷயம் என்னவென்றால் தன் தோட்டத்திலிருந்து வரும் எந்தக் கழிவுகளையும் இவர் வெளியில் போடுவதில்லை. அனைத்து கழிவுகளையும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக மாற்றிப் பயன்படுத்திவருகிறார். ஜஸ்வந்தின் இந்தச் செயலுக்காக சென்னை மாநகராட்சி இவருக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.