சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் ஜஸ்ட் டயல், சுலேகா ஆகிய ஏஜென்சிக்கு ஆன்லைன் இணையதளம் மூலம் வீட்டிற்கு வேலை ஆட்கள் தேவை என பதிவுசெய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வேறோரு அமுல் மேன் பவர் என்ற ஏஜென்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அதில் அமுல் என்ற பெண் பேசியுள்ளார். அவர், "சைதாப்பேட்டையில் எங்கள் நிறுவனம் உள்ளது. நீங்கள் கேட்கும் விதத்தில், சம்பளத்தில் வீட்டு வேலையாட்கள் உள்ளனர். அதற்கு நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அசோக் அப்பெண்ணிற்கு இணையதளம் மூலம் ஐந்தாயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், இரண்டு, மூன்று நாள்களாகியும் அசோக் வீட்டிற்கு வேலைக்கு ஆட்கள் வரவில்லை. இதையடுத்து அவர் பணம் செலுத்திய பெண்ணைத் தொடர்புகொண்டபோது, தொலைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் அசோக் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக அசோக் ஆய்வு செய்தபோது, சென்னையில் வீட்டு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களைக் குறிவைத்து தொடர்ந்து மோசடி நடைபெறுவது தெரியவந்தது.