சென்னை:அனைத்து தரப்பு மக்களாலும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
குறிப்பாக நேற்று இரவு மட்டும் சென்னை முழுவதும் 499 சோதனைச் சாவடிகள் அமைத்து 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநகரில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
குறிப்பாக நேற்று இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
269 வழக்குகள்
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் போக்குவரத்து காவல்துறைக்கு தெரிவித்து உள்ளது.
குறிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 269 வழக்குகளில் 147 வழக்குகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 20 வழக்குகள் வேகமாக வாகனம் ஓட்டியதாக பதிவு செய்துள்ளதாகவும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 15 வழக்குகளும், ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 82 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற மூன்று விபத்து சம்பவங்களில், ஒருவர் உயிரிழந்ததாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு