சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில இரண்டாம் நாளான நேற்று (ஜூன் 20) அந்தந்த மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் திருவள்ளூர் காவல் எல்லையில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனைச்சாவடியில் பணியாற்றி வருகிறார்கள்.
அரசு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோரிடம் இ-பாஸ் இல்லாததால் அவர்கள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்தும் யாருக்கும் காவல் துறையினர் அனுமதி அளிக்காததால் மிகுந்த வேதனையுடன் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே மின் ஊழியர் ஒருவருக்கு இ-பாஸ் இல்லாததால் அவர் காவலர் ஒருவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த காவலர், மின் ஊழியரை கீழே தள்ளிவிட்டு, அங்கு இருந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இந்தச் சம்பவம் சோதனைச் சாவடியில் இருந்த மற்றவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. முறையான காரணங்கள் இல்லாமல், மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு காவலர்களின் செயல் வேதனை அளிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இ-பாஸ் பெற்றும் அது காலாவதி ஆகிவிட்டதாகக்கூறி அனுமதி மறுக்கப்படுவதாக கூறும் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பரிசோதனைக்கு மறுத்து காவலர்களை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்!