சென்னை: சென்னையில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau) அதிகாரிகளுக்கு சென்னை ராயப்பேட்டை பகுதியில் சிலர் போதை பொருட்களை விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ராயப்பேட்டை பகுதியில் ஒரு அறையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 7.45 கிராம் கொக்கைன் போதை பவுடரும், 7.20 கிராம் எம்.டி.எம்.ஏ எனப்படும் போதை மாத்திரைகளும் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போதை பொருட்களை பறிமுதல் செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறையில் இருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெங்களூரில் இருந்து சில நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் இருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 407 கிராம் ஆம்பெட்டமைன் என்கிற போதை பொருள் பவுடரையும், 138 கிராம் எம்.டி.எம்.ஏ போதை பொருள் மாதிரிகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரில் தங்கியிருந்து வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.