சென்னை: மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயில் கோபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட தென்னை ஓலைகளில் பட்டாசு வெடித்த நெருப்பு விழுந்ததே திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மக்கள் காலையில் எழுந்து புத்தாடைகளை உடுத்திக் கொண்டு, தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். மாலை நேரத்தில் அனைவரும் ராக்கெட், வாணவேடிக்கை என இரவு நேரத்தில் வானத்தில் சென்று வெடிக்கக் கூடிய பட்டாசுகள் தான் வெடிப்பர்.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் இன்று (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, பட்டாசு ஒன்று சாய்பாபா கோயிலின் கோபுரத்தில் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தென்னை ஓலை மறைப்பின் மீது விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஓலையில் தீப்பிடித்து மளமளவென பரவத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.