சென்னை வண்ணாரப்பேட்டைப் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, நேற்று இஸ்லாமியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை தொடர்ந்த நிலையில், அவர்களை கலைந்துபோகும்படி காவல் துறையினர் வலியுறுத்தினர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததையடுத்து அங்கு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடிதடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல காட்சியளித்தது. இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் போராட்டம் இதனிடையே இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, சென்னையின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. ஆலந்தூர், கிண்டி, அண்ணா சாலை, அண்ணா நகர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டம் இதன் ஒரு பகுதியாக நள்ளிரவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மவுண்ட் ரோடு தர்கா முன்பாக 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசத் தீர்வு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் 120க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்