சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!
19:45 November 11
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசனை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தற்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் செந்தில் பாலாஜி 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக செந்தில் பாலாஜி உள்பட பலர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகாரளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் செந்தில் பாலாஜி, அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் பணியிலிருந்த அலுவலர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை செய்து முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். கைது செய்யப்படாமல் இருக்க செந்தில் பாலாஜி முன் பிணை பெற்றுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி கடந்த 9ஆம் தேதி மீண்டும் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் நான்கு மணி நேரமாக விசாரணை நடைபெற்றது..
இதனையடுத்து இந்த மோசடி வழக்கில் போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் கணேசனுக்கு மோசடியில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கணேசனைக் கைது செய்து மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கணேசனை எழும்பூர் மாஜிஸ்திரேட் நாகராஜன் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வரும் 25ஆம் தேதி வரை கணேசனை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.