சென்னை: சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டுக்கான இலவசத் தொழிற்பயிற்சிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பித்துப் பயிற்சியில் சேரலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறக்க தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCVT -National Council for Vocational Training) சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும், மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும்.
காலியான இடங்கள்: கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (34 இடங்கள்), பிளம்பர் (26 இடங்கள்), ஃபிட்டர் (126 இடங்கள்), எலக்ட்ரிசீயன் (66 இடங்கள்), மோட்டார் மெக்கானிக் (116 இடங்கள்), எக்ட்ரானிக் மெக்கானிக் (6 இடங்கள்) என மொத்தம் 71 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 184 இடங்களில் 113 இடங்கள் சேர்க்கை செய்யப்பட்டு விட்டது.
பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவசப் பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.