தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மூவரசம்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

சென்னையில் தீர்த்தவாரி நிகழ்வில் சுவாமி பல்லக்கை தூக்கிச் சென்றவர்களில் 5 பேர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Moovarasampattu temple pond drowned 5 people died
சென்னை முவரசம்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி

By

Published : Apr 5, 2023, 12:28 PM IST

Updated : Apr 5, 2023, 7:55 PM IST

சென்னை மூவரசம்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி.. அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் விளக்கம்

சென்னை: ஆலந்தூர் அடுத்த மடிப்பாக்கம் பகுதியில் தர்ம லிங்கேஸ்வரர் கோவில் ஆலயத்தில் பங்குனி மாத தீர்த்தவாரி பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை கோவிலில் இருந்து தர்மராஜா சுவாமியை 25 நபர்கள் பல்லக்கில் தூக்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து மூவரசம்பட்டு பகுதியில் உள்ள கோவில் குளத்தில் பல்லக்கை இறக்கி வைத்து விட்டு குளத்தில் அனைவரும் மூழ்கி எழுந்துள்ளனர். அப்போது அதில் ஐந்து பேர் மட்டும் தண்ணீரில் மூழ்கி வெளியில் வராமல் இருந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடினர். எவ்வளவு தேடியும் அவர்கள் கிடைக்காததால் கிண்டி, வேளச்சேரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளத்தில் மூழ்கிய ஐந்து பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஐந்து பேரையும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஐந்து பேரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றிய பழவந்தாங்கல் போலீசார் உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (24), மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராகவன் (18), கீழ்கட்டளை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (23), நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பணேஷ்(20) எனத் தெரியவந்ததுள்ளது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு இணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சங்கர் ஜிவால், “உடலை மீட்டுள்ளோம். விசாரணை நடைபெறும். இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பழவந்தாங்கல் போலீசார் தரப்பில், தீர்த்தவாரி குளத்தில் இறங்கும் நிகழ்வு குறித்து அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் கோயில் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து குரோம்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் உயிரிழந்த குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நங்கநல்லூர் தர்ம லிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரியின்போது குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்ததனர். அனைவரும் சிறிய வயதுடையவர்கள், எல்லோரும் நன்கு படித்தவர்கள். திடீரென நடந்த இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் நடந்துள்ளது. முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே தகவல் வந்தது. உடனடியாக முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூற அறிவுறுத்தினார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேர் குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிச்சயம் உதவி செய்வார்” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' பட பாணியில் பலே திருட்டு.. ஆந்திர கும்பலை அள்ளிய வேலூர் போலீஸ்!

Last Updated : Apr 5, 2023, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details