சென்னை:கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பொது நிகழ்ச்சி, கட்சிக் பொதுக் கூட்டத்தில் பங்கு பெறுவது என எந்த நிகழ்வுகளிலுமே அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் காரணமாக மருத்துவ பரிசோதனைக்காகச் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சளி மற்றும் இருமல் அதிகமாக அவருக்கு இருப்பதால் ஒரு சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பிலிருந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவவே கடந்த 23ஆம் தேதி மியாட் மருத்துவமனை தரப்பிலிருந்து விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவர் மருத்துவச் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் தேமுதிக பொருளாரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்தும் அவரது உடல் நிலை குறித்தான தகவல்களை அவ்வப்போது விடியோ மூலமாக அறிவித்திருந்தார்.