சென்னை:மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் பிணக்கூறாய்வு நிபுணராகப் பணிபுரிபவர், மருத்துவர் பராசக்தி. இவரது கணவர் மோகன் குமார் என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் தனியார் கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்குக்கு 17 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை சிலர் அழைத்து வந்துள்ளனர். அந்த மருத்துவமனையை நடத்துபவர் உமா மகேஸ்வரி என்ற மருத்துவர். உமா மகேஸ்வரியை அணுகிய அவர்கள், 17 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாகவும், அதைக் கலைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சிறுமியை ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்த சிறுமி 16 வார கால கர்ப்பமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அந்தச் சிறுமியை சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனது தோழியும், அரசு மருத்துவருமான பராசக்தி நடத்தும் தனியார் கிளினிக்குக்கு வந்துவிடுமாறு உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.
அந்த தனியார் கிளினிக்கில் மருத்துவர் பராசக்தி மற்றும் உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் இணைந்து அந்த சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர் மகளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது சிறுமியின் தந்தைக்குத் தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் மகளை விசாரித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஆவேசமடைந்த சிறுமியின் தந்தை, இது குறித்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதாவிடம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மகிதா உடனடியாக விரைந்து செயல்பட்டு சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமான ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
அத்தோடு நின்று விடாமல் சிறுமியிடம் எங்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது போன்ற விவரங்களை கேட்டு அறிந்தார், ஆய்வாளர் மகிதா. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உமா மகேஸ்வரி மற்றும் பராசக்தி ஆகிய இருவரையும் அழைத்த ஆய்வாளர் மகிதா, 17 வயது நிரம்பிய சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்தது சட்ட விரோதம் என்று கடுமையாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
மேலும், இந்த விஷயத்தில் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி, அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக உமா மகேஸ்வரியிடம் இரண்டு லட்சம் ரூபாயும், மருத்துவமனை உரிமையாளரான பராசக்தியிடம் 10 லட்சம் ரூபாயும் லஞ்சமாக கேட்டுப் பெற்றுள்ளார், மகிதா.
லஞ்சத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த மருத்துவர் பராசக்தி 10 லட்சம் ரூபாயை பறிகொடுத்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பிணக்கூறாய்வு மருத்துவராக இருப்பதால் காவல் துறையில் நல்ல செல்வாக்கு பெற்றவராக இருந்து வருகிறார். எனவே, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல் ஆய்வாளர் மதிதா தன்னிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் என்று தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆணையர் அமல்ராஜ், இது குறித்து விசாரித்தபோது கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்சம் பெற்றது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மகிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட அமல்ராஜ், அவர் மீது வழக்குப் பதியவும் செய்தார். இதனையடுத்து மகிதா தலைமறைவாகிவிட்டார்.